*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 6 அக்டோபர், 2010

 த.அஜந்தகுமார்

அவள் என்னைத் தொடர்வதை
தாங்க முடியவில்லை
தாங்கமுடியாத வெயிலாய்
நிழல்களைத் துவம்சம் செய்யும் நீலக் கண்களுடன்
பரபரத்துத் தொடர்கிறாள்
ஒடுங்குகிறேன்
ஓடுகிறேன்
எனினும் குறுஞ்செய்தியில்
தவறிய அழைப்பில்
என்னைச் சலிப்படைய வைக்கிறாள்
தேவதைகள் பற்றிய அத்தனை கனவுகளையும்
ஏப்பம் விட்டிருந்தாள்
எனது கைபேசியை உடைத்துவிட்டேன்
யாருடனும் கதைப்பதைத் தவிர்க்கிறேன்
எனினும்
அவள் பரப்பும் கதைகளை
காதுகள் கேட்கின்றன
இரக்கமற்ற அவள்
என் மீது காதல் பொழிகிறேன் என்கிறாள்
எந்தத் தேவதைகளும் பேய்களும்
வாராது அடைக்கும் கதவு எங்குள்ளது?
அறியத் தருவீரா ?
இந்த வெயிலில் இருந்து தப்ப
குடை வேண்டும்

(இக்கவிதையில் சில திருத்தங்களுக்கு உதவிய கவிஞர் திருமாவளவனுக்கு நன்றி)

இது கவிதை அல்ல: கவலை


 த.அஜந்தகுமார்

உனது சைக்கிளைப் பற்றியே
நீ ஓயாது கேட்டுக் கொண்டிருந்தாய்
நான் எனது சைக்கிளைக் கொண்டு வந்து
உன்னருகில் விட்டேன்
நீ சைக்கிளை என் தலை கோதுவது போல்
மெதுவாகத் தடவினாய்
உன் தெரியாத கண்கள்
கோபத்தினால் அலைக் கழிந்தன

சைக்கிளைத் தள்ளிவிட்டாய்

எதுவும் செய்ய முடியாது
சைக்கிளை எடுத்துச் சென்றேன்

என்னால் உன் முன்னால்நிற்க முடியவில்லை
நான் உன் முன்னால்நிற்பதாய் நினைத்து
கைகளை வீசினாய்
ஏதேதோ வாய்மொழிகள் கோபத்தில் கத்தினாய்

என் செய்வேன் நான்
கதிரையில்

தலை குத்தி இருந்தேன்

பின் விறாந்தையில்
தூசுகள் நடுவே
சாத்தப்பட்டிருந்த
சைக்கிளைப் பார்த்தேன்
கம்பிகள் துருப் பிடித்திருந்தன
றிம்மும் ரயரும் பாவிக்க முடியாததாய்...
இருக்கை காகம் கொத்தியதைப்போல போல ஒரு தோற்றமாய்
அம்மாவுக்காய் போட்ட கரியல் யாரும் இருக்கமுடியாததாய்

ஓடித்திரிந்த சைக்கிளும்
அப்பா நீ முடங்கிய போது தானும் முடங்கிவிட்டது
இப்போது நீயும் உன் சைக்கிள் போலவே...

செவ்வாய், 5 அக்டோபர், 2010

உன் பெயரில் இப்பொழுதும் ஒரு சிலிர்ப்பு இருக்கிறது

இப்பொழுது
யோசிக்கையில்
கொஞ்சம் வெட்கம் அமர்கிறது

நீ அருகில்லாத கணத்தை யோசிக்கப் பயந்தேன்
எனினும் நீ பிரிந்தாய்
கசப்புகளின் கோப்பையோடு
கொஞ்ச நாட்கள் ....
எனினும் ஞாபகம் என்பது
கீழிறங்கிச் சென்று
ஓரடுக்கில் பதுங்கியிருக்கியிருக்கிறது
யாரும் கிளராதபோது
நல்ல பிள்ளையாய்ப் படுத்திருக்கிறது

உன் பெயரை யாரும் சொல்வதை
நான் விரும்பவில்லை
அடுக்கில் இருந்து
மேலெழும் நினைவுகளை
இப்போது  வெறுக்கிறேன்

உனது பெயரில்
இப்பொழுதும்
ஒரு சிலிர்ப்பை உணர்கிறேன்

எனினும் சிலிர்ப்பில்
எனது உடல் கனக்கிறது
நோய்களின் கூடாரமாய்
நானாகுவதாய் பிரமை சுழல்கிறது

நீ வெகு துாரத்தில் இருக்கிறாய்
என் நினைவின்றி இருக்கிறாய்

உன் பெயர்ச்சாவி
என் கதவுகள் எல்லாவற்றையும்
மளமளவென்று திறக்கிறது
தென்றல் புகுந்து வருடிய காலம் இப்போது இல்லை
உடலைச் சல்லடையிடுகிறது புயற்காற்று

எனவே அவள் பெயரை
யாரும் சொல்லற்க.....!

வியாழன், 3 ஜூன், 2010

பேசியபடியிருத்தல்


கவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகிறது

காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும்
உன் திருமுகத்தை
நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன்

எனது வலிகள் ஒப்பிக்க முடியா மொழியில்
கீறிக் கிளர்கிறது

நினைவடங்கா வெளியில்
நனவுகளின் இரத்தம் பரவுகிறது

மாறிக் கொண்டிருக்கும் காட்சி
இயலுமையின் கைகளிலும் இயலாமை

குருஷேத்திரம் நிகழ்ந்தபடியிருக்க
புறாக்கள் இரத்தச் சிறகுகளோடு காதல் கொள்கின்றன

நீயும் நானும் வெளிகளில் வீசப்பட்டிருக்கிறோம்

உனது திசையை நானும்
எனது திசையை நீயும்
முகர்ந்தபடி .......
கால நாக்கில் ஒட்டப்பட்டிருக்கிறோம்

வாரத்தைகள் நமதானவை

எங்கிருந்து பேசினாலும்
நாம் முகம் பார்த்துப் பேசியபடியிருக்கிறோம்

2006

ஞாயிறு, 2 மே, 2010

என்னைக் கடந்து செல்லும் நகரம்



---த.அஜந்தகுமார்



எனது நகரம்
என்னை
மிக வேகமாகக் கடந்து செல்கிறது

பிதுங்கி நிறைந்த பஸ்ஸை
மறிக்காது
கை கட்டி நிற்பவனாய்
நான்.

நகரத்தின் கைவிடப்பட்ட
கைக்குழந்தையாய்
கை சூப்பி
தெரு அளக்கிறேன்

எனது அறையும்
நானும்
தனித்திருக்கிறோம்

நேற்று என்னுடன் மிஞ்சியிருந்த
வண்ணத்துப் பூச்சியும்
சுவரில் மோதி செட்டைகள் பிய்ந்து
உருக்குலைந்து இறந்து போயிருந்தது

வண்ணத்துப் பூச்சியின் செட்டைகளை
பத்திரப்படுத்துகிறேன்

பல்லியின் வால் ஒன்றும்
தனியே இருந்தது

வீட்டுக் கூரையின் சிலாகையில்
சாரைப்பாம்பொன்று செட்டை கழட்டி விட்டு
போயிருந்தது

என்னை நகரம் கடந்து சென்ற பின்னும்
புன்னகைத்தபடி இருக்கும் உதட்டிலும் முகத்திலும்
கடந்து போன வாகனங்களின் புகைகள்
படிந்து போயிருக்கின்றன

இன்னும் எழுத முடியாமல்
மீதமிருக்கும்
கவிதைகளுடன்
எனது அறைக்கதவை
யாரும் திறக்காதபடி மூடிவிட்டு
எழுதிக் கொண்டிருக்கிறேன் எனது நகரத்தை!

03052010 1034

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

உயிர் தொங்கும் வாழ்க்கை


த.அஜந்தகுமார்


கதவை அடித்துச் சாத்திவிட்டு

குண்டி காட்டிப் போகிறார்கள்

நெளித்தபடி.


கோபத்தில் கைகள்

நடுங்குகின்றன


உள்ளங்கை வியர்க்கிறது

கதவை இழுத்துத் திறந்து

காற்றில் குளிக்கிறேன்

கனவுகளில் மாத்திரம்!


விழிப்பின் நினைவில்

சுவர்கள் நெருங்கி

என்னை நொருக்க

மூச்சு முட்ட முட்ட

சாவின் விளிம்பில்

முனகியபடி தொங்குகிறேன் .






திங்கள், 26 ஏப்ரல், 2010

உன்னைப் பற்றி நான் எழுதும் இறுதிக் கவிதை


.அஜந்தகுமார்


எப்படியோ மீண்டும் மீண்டுமாய்
உன்னை நினைக்கத் தூண்டும் வாழ்க்கை!
நான்
நினைக்க மறுத்தாலும்
ஏதோவொன்றின்
பொறியில் இருந்து
மூண்டு
மிளாசி வளர்கிறாய்

எனது கண்களில் குத்தி இறங்கி
வலிகளைத் தந்துவிட்டுப் புன்னகைக்கிறாய்
நானே
என்னில் கோபப்பட்டும்
உன்னை
எறிந்து விடமுடியாத துக்கத்தில்
………………………………………..
..................................
எதையுமே
விட்டு வைக்காமல்
யோசித்துத்
தொலையும் மனதில் உள்ள
உனது
சுவடுகளில்
தேங்கித்
ததும்பும் கண்ணீரில்
உன்
முகம்தான் தெரிகிறது

உன்னை வேறொருவன் நிறைத்துவிடப் போகும் வாழ்வில்
உன்னை
என்னை விட்டு
எறியாது
இருக்கும் துரோகத்திற்கு
நான் என்ன செய்வது?
……………………..
…………………......
உன்னைப்
பற்றி நான் எழுதும்
இறுதிக்
கவிதையாய் இது இருக்கட்டும்

26042010 2216

புதன், 7 ஏப்ரல், 2010

எங்கள் ஊரிலும் நாலு வேட்பாளர்கள்



---த.அஜந்தகுமார்

என்னுடன் படித்த இரண்டு நண்பர்களின் முகங்கள்
சுவர்களில் சிரிக்கின்றன
மிக அழகான படங்கள் என்று
அவர்களிடமே சொல்லியிருந்தேன்

எனது ஊரிலும் நாலு வேட்பாளர்கள்
நாலு சின்னங்களில்!

தங்கள் வல்லபத்தை எல்லாம்
உடம்பெல்லாம் வாயாக்கி
அவர்கள் சொல்வதைக் கேட்டு
நான் ஒவ்வொரு முறையும் புல்லரித்திருக்கிறேன்

ஒவ்வொருவரிடமும்
ஒரு மந்தகாசப் புன்னகையோடு
“உம்மையன்றி வேறோர் கதியில்லை’
என்பேன்
ஒன்பது அப்பங்களையும்
தாமே தின்று ஏப்பமிடும்
அவர்களின் பெருங்கனவு நாளையுடன்
உடைந்து விடப்போகிறதே என்று மிகவும்
துக்கிக்கிறேன்
மின்னலென அவர்களிடம் பிரகாசித்த
சமூக அக்கறை
நாளையுடன் மறைந்துவிடுமே என்று
தடுமாறுகிறேன்
எனக்கு கொஞ்சக் காலமாய்
பொழுது போனதே தெரியவில்லை
பல நகைச்சுவை நிகழ்ச்சிகள்
நாளையுடன் முடிகிறது என்று
என் நாத் தழுதழுக்கிறது
எப்பொழுதுமே
தேர்தல் காலமாய் இருந்தால் எவ்வளவு
மகிழ்ச்சியாய் இருக்கும் என்று
என் மனம் சின்னக்குழந்தையாய் ஏங்குகிறது


07042010
23546

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

நிம்மதியின்மை நடுவிலும் இருக்கும் ஒரு அமைதி






---த.அஜந்தகுமார்


உனது அழுகை
எனக்குள்
இறங்குகிறது
பெரும் பாறையாய்!

வார்த்தைகளற்ற
ஓலமுடனான உன் அழுகை
வாழ்க்;கையின் சாரம்
என்னவென்று வினாவிற்று.

உனது படுக்கையைச்சூழ
நிலவும் ஒரு அமானுஸ்யம்
உன்னையே நீ தொலைத்தபடி
என்னுடன் துக்கிக்கும் கணங்கள்
உனது சாரமும் படுக்கை விரிப்பும்
ஈரமாகி விட்டதே
என்ற உன் இயலாமைப் பார்வை
நீராட்டி உணவூட்டி
தலைகோதி விடுகையில்
உன் சலிப்புகள் மத்தியிலும்
தெரியும் ஒரு ஏதோ ஒன்று!

இரவில் நிம்மதியாய்
உன்னால்
உறங்க முடிவதில்லை
உன்னைக் கனவுகள்
பயமுறுத்துவதாய்
உணர்கிறேன்
திடீர் திடீர் என்று
யார் யாரையோ கேட்கிறாய்
ஏதோ நடந்துவிட்டதாய்ப்
பயங் கொள்கிறாய்
உன் கனவுகளின் நிறங்களை
அறிய முடியாது
என் கண்கள் பனிக்கின்றன

யாருக்கும் துரோகம்
செய்யாத
புன்னகையின் வசீகரம் சூழ்ந்த
ஒரு உறவின் நெருக்கம்
எனக்கு வாய்த்ததென்ற
ஒரேயொரு திருப்தி
என் வாழ்வை அழைத்துச் செல்கிறது… 23022010

திங்கள், 22 பிப்ரவரி, 2010

எழுதிச் செல்லும் கண்ணீர்





---த.அஜந்தகுமார்


சிறகு விரித்தேன்
வானமானேன்

நீந்தினேன்
கடலானேன்

நடந்தேன்
பாதையானேன்

உன்னைக் கண்டேன்
காதலானேன்

நீ பிரிந்தாய்
கண்ணீரானேன் 22022010 1254

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பொய்யுலகக் கதைக்குறிப்புகள்




---த.அஜந்தகுமார்

1

பொன்வண்டு பிடிக்கவென்று
ஒதியம் மரத்தொடு பலமரங்கள்
என்னென்று தெரியாத
ஏக்கமுடன் தேடியலைந்தேன்

மின்னி நின்ற பச்சியினை
மகிழ்வோடு கைக்குள் பொத்தி
மெதுமெதுவாய்த் திறக்கையிலே
புழுத்த மணமொன்று
முகத்தில் அடித்தது

பிடித்த பீ வண்டு
பறந்து போனது

2

தீப்பெட்டியில் வளர்த்து வந்த
பொன்வண்டு
எப்படி இருக்கிறது என்று
திறந்து பார்த்தேன்

காணவில்லை

சாப்பிடப்போட்டிருந்த
கிளுவம் இலை
எனைப் பார்த்துச் சிரித்தது

தீப்பெட்டியைக் போபத்தோடு
நிலத்தில் எறிந்தேன்

3

மழையொன்று பெரிதாகப் பொழிந்து
சற்று ஓய்ந்திருந்தது

தீப்பெட்டி துளைத்துக்
கிளுவை முளைக்கத் தொடங்கியிருந்தது

வேரின்றி இலையினிலே
முளைத்து வரும் அதிசயத்தை
பார்த்தபடி நான் இருக்க
மரமாக அது வளர்ந்திற்று

4

கிளுவையிலே
பொன் வண்டிருந்து சிரித்திற்று.
பரபரப்பாய்
நான் அதனை நெருங்குகையில்
பீ வண்டின் வாசம்
என் நாசிக்குள் ஏறியது

பீ வண்டே பொன்வண்டாய்
ஆனதோர் உலகினிலே
நானென் செய்வேன்? – என்
நாசியென் செய்யும்?

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

என்னோடு உறையும் வாள்




---த.அஜந்தகுமார்


கையில் மினுங்கியபடி
தயாராய் இருக்கிறது
எனது வாள்

என்னைக் கூர்மைப்படுத்தவும்
யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லவும்
என்னைத் தேவையற்றுத் தொடர்பவர்களைப்
பயமுறுத்தவும்
நான் நடந்து செல்லும் பாதைகளைத்
தூய்மைப்படுத்தவும்

தயாராய் இருக்கிறது எனது வாள்

துருப்பிடித்துப் போன
கத்திகளுடன் அலைபவர்கள்
என் வாளைப் பற்றிய
கேள்விகளை முணுமுணுத்தபடி
செல்வதைக் காண்கையில்
என் நரம்புகள் தெறிக்கின்றன

துருப்பிடித்த கத்திகளையும்
பிடித்த கைகளையும்
என் வாள்கள் துண்டாட
அதிக நேரம் வேண்டியதில்லை

எனினும் பொறுத்திருக்கிறோம்
மினுங்கும்
என் வாளும்
நானும். 16022010

சனி, 13 பிப்ரவரி, 2010

ஓவியத்தில் காணமுடியாக் கோடுகள்


---த.அஜந்தகுமார்

இன்றிந்தத் தினமதில்
எந்தன் நெஞ்செங்கும்
உந்தன்
நினைவெழுதும் நெடுங்கதைகள்

நட்பின் சுருதியில் நனைந்து கிடந்த
நம் வாழ்விடை
துளிர்த்த….
புரியாத அன்பின் புதிர்ப் பக்கங்களால்
நான் மூடப்பட்டு இருக்கிறேன்

கோடுகள் வரைந்து சென்ற
ஓவியத்தில்
மீண்டும் என்னால்
கோடுகளைக் காணமுடியவில்லை

நட்பின் சுருதி நனைத்த
உன் ஓவியத்தில்
இன்னும் கசங்காது உள்ளது
ஏதோவொன்று.

எந்தப் பெண்ணைக் கடந்து செல்கையிலும்
அம்மா எனக்காய்ப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும்
உன்னை எண்ணாது இருக்க முடிவதில்லை.

மிக இரகசியமாய்
மீண்டும் உனக்கு
என்னைக் காட்ட முடியா
அவஸ்தை பிழிபட
நான் - இந்த நான் வாழ்கிறேன்

14022010
1127 am

சனி, 23 ஜனவரி, 2010

அப்பாவின் சித்திரம் -


---த.அஜந்தகுமார்


மௌனத்துள் இறுகிச்
சொருகிக் கிடக்கும் உன் வாழ்வு

ஏதேதோ நினைவுகளில்
உன் உலகம் இருத்தல் கூடும்

என்னப்பா என்று ஏதும் கேட்டால்
உன்பாட்டில் மெல்லிய புன்னகை தெளித்து
விலகிச் செல்வாய்

கடவுளின் கருணையிலும்
உன்னால் நான் சந்தேகம் கொண்டேன்

உன் விரல்கள் எழுதும்
மொழிகள்
விளங்க முடியாதவையாய் மாறி வருகின்றன

உன் விழிகளின் பிரகாசம் குன்றி
வருவதை
மரணத்தின் வாசலாய் எண்ணிப் பயங்கொள்கிறாய்

எனது எந்தச் சமாதானங்களுக்குள்ளும் சிக்காது
தனித்து வருகிறாய்

கடவுளின் கருணையிலும் உன்னால்
நான் சந்தேகம் கொள்கிறேன் 23012010

சனி, 16 ஜனவரி, 2010

ஒளிப்பிழம்பை வினாவுதல்




---த. அஜந்தகுமார்

1.
கேட்கலையோ உலகீரே
என் விசும்பல்
மண் பிளந்து விண் எழுந்து
ஒலிக்கிறதே
கேட்கலையோ?

ஆட்காட்டி விரலுக்கு
ஆயிரம் அர்த்தங்கள்.
நீட்டாய் இருந்த விரல்
குறுகி,
நினைக்க முடியாப் புள்ளியாய்
கையோடு ஒட்டுண்டு
புழுங்கிக் குமைகிறது

போக்காட்டும் வாழ்க்கையில்
இருப்பது போதுமென்று இருந்திட்டேன்
சாக்காடு வரைதானே வில்லங்கம்!
சரி, பொறுப்போம் என்று
நாக்கைப் பல்லைக் கடித்து
நான் பொறுத்தேன்
கூக்காட்டிச் சிரிக்கிறது வாழ்க்கை
குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுகிறது காலம்
கேட்காமல் என் மனசு
விசும்பலிடை ஏதேதோ சொல்கிறதே
ஆக்கினைதான்
என் செய்வாய் என் மனமே!

2.
ஒளிப்பிழம்பே!
சோதியாய்த் துலங்கும் அகண்டமாயினை
ஆயின்,
என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றனை?
உனது சுவடுகளைத் தொடர்ந்து வந்து
உன்னைத் தேடும் மூர்க்கனாய் மாறி
முயல்கிறேன், என் கனவுகளுடன்!

ஒரு சுவட்டிற்கு அப்பாலான
உன் பெரிய்ய்ய மறுசுவட்டில்
கால் வைக்க முயன்று
நெருங்கி வர,
நான் கருகும் வாசம்
என்னையே ஓங்காளிக்க வைக்கிறது
பரவும் உஷ்ணத்தில்
பாதிமுகமே எரிந்தது போல் ..........
பிரமை!

கானல் சுவடாய்
ஒளியாய்......
நீ மாறிமாறிச் செய்யும் பராக்கில்
எலும்பாய் மாறி
என் சுயம்
அங்கு இங்கென்று
காற்றில் உலைகிறது.

உனக்கென்ன?
என்னைச் சோதிக்கும்
விளையாட்டு இதுவென்று
நீ மகிழ்வாய்!

ஏதிலியான என் ஏழ்மை கண்டு
ஒரு வெற்றிக் களிப்பில்
ஊடல் கொண்டிருந்த உன் பிராட்டியுடன் நீ
‘மொத்தி’ மகிழலாம் கலவியில் களிக்கலாம்

நான்
மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கிக் கதறியழ

நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு!
நெற்றிக் கண்ணில் இருந்து
பிள்ளைகளை உற்பவி!
சுடுகாடு சென்று
எங்கள் சாம்பல்கள் எடுத்து நீறணி!
உடலம் வளர்;த்தி
எரிதழல் மூட்டிய இடத்தில்
உன் தேவர் குழாம் புடைசூழ
புதல்வர்கள் இருவர் சகிதம்
பிராட்டி சமேதனாய்
சோமபானம் பருகி மகிழ்!
ரம்பை ஊர்வசியை நடுவே சுழலவிடு!
கண்களை ஒளியாக்கு!

தம் கனவைப் புதைத்து விட்டு
மாண்ட தலைமுறையோடு
புணர்ந்து கிட!
கலவிக் களிப்பின் தத்துவத்தை
உலகுக்கு உரை!

ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீர்



---த. அஜந்தகுமார்


நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.

ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக்கிடந்து
அவனின் இறுதிச் சொற்களைத்
தம்மோடு எடுத்துச் சென்றன

யாராவது ஒருவனின்
சாப்பாட்டுக் கோப்பையில்
தேநீர்க் கோப்பையில்
மலக்குழியில்
அந்த ஈக்கள் இருக்க முயற்சித்தாலும்
இறந்தவனின் சொற்களைக் காவும் ஈக்களை
எல்லோரும் கலைத்துக் கொண்டே இருக்கிறார்கள்

கலவரம் நிறைந்திருக்கும் அவர்களின் முகத்தில்
இறந்துபோனவனின் முகவிகாரம் இறுகிக் கிடக்கிறது

நாம் எல்லோரும் அந்த ஈக்களைக்
பிடித்துக் கசக்கி
தேநீருள் போட்டு:
நுள்ளான் சாப்பிட்டால்
நூறாண்டு வாழலாம் என்பது போல்
குடிப்போம்!
குடிப்போம்!!
வாழ அதுவே வழி

புதன், 13 ஜனவரி, 2010

என்னிலிருந்து வெளியேறும் ஒருவன்

த. அஜந்தகுமார்

ழித்தாண்டவனாய்
எனக்குள் ஒருவன்
சுற்றிச் சுழற்றி
என்னை ஆட்டியபடி....

மனம் அதிர்ந்து
கண் கனிந்து
கை பதறி
கால் நடுங்கி
நான் சோர்ந்து வீழ
அவனின் ஆட்டம்
உக்கிரம் கொள்கிறது


நாயின் வாலாய்
என்னை நிமிர்த்த முடியாது
திணறித் திகைத்தபடி இ;
உக்கிரம் கொள்கிறேன்
சில கணங்களில் விழித்தபடி!


அவனின் உக்கிரம்-
எனது உக்கிரம்-
உக்கிரத்தின் உற்பவிப்பில்
அவன் வெளியேறுகிறான்

நிமிடங்கள் எரிந்து வீழ
அவன் மீன்டும் வந்து
யாதொன்றும் வாய்வாளாது
'தீதெண்று" ஏதோ என்னித் தேம்பித்திரும்பினான்

புன்னகைகளின் விஷங்கள்

த. அஜந்தகுமார்

ன்னைக் கடந்து செல்லும்
முகங்களின் புன்னகைகளை
ஏளிதில் என்னால்
நம்பிவிட முடியவில்லை
புன்னகைகளின்
பின்னால் தடவப்பட்டுள்ள
விஷங்களின் கதிர்கள்
என்னைப் பயமுறுத்துகின்றன
என் முன்னால்
பற்கள் வெள்ளையாய்ச் சிரிக்கின்றன
என் பின்னால்
அவை என்னைக் கேவலப்படுத்தி
வஞ்சகம் செய்கின்றன
எதையும் நம்பிவிடமுடியாதபடி
காலம் என்னைக்
கடந்தபடி இருக்கிறது
ஊரெல்லாம் என் கதைகளை
சொல்லித் திருப்திப்படுகின்றன வாய்கள்
வாய்களில் வழிந்தபடி இருக்கும்
விஷங்களையும் வீணீரையும்
என் கண்கள் கண்காணித்தபடியே இருக்கின்றன
யாரையும் எளிதில்நம்பமுடியாத
அபத்தம் எண்ணி
என் மனம் அழுகின்றது
என் முன்னால்
நீலம் பாரித்த ஒரு நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
ஏன் கண்ணீர்த்துளிகள்
நீலநதியில் சேர்கின்றன
கண்ணீர்த்துளிகள்
என்றோ ஒரு நாள்
நதியைச் சுத்திகரிக்கும்
என்று என் மனம்
நம்பியபடி இருக்கிறது.

இழை பிரிந்த மௌனங்களின் கதைச்சித்திரம்

த. அஜந்தகுமார்

முடிவற்றுத் திறக்கிறது
நமது இரகசியங்களின்
உள்ளறைகள்

ஒரு புள்ளியில் தொடங்கும்
நம் கதைச்சித்திரம்
மீண்டும் அந்தப் புள்ளியில்
கால் புதைக்கிறது

சுவாரசியங்களில்
பொழுதுகள் தின்னப்பட
நமது கதிரைகளைக்
கதைகள் நிறைக்கின்றன
காற்று கேசத்தைத் தொட்டு
வருடிச் செல்லும் உணர்வில்
தொற்றிக் கொள்ளும் சொற்கள்
இறுகக் கைபற்றி
என் முகம் பார்க்கின்றது


இழை பிரிந்த
மௌனங்களிடம்
காயங்கள் ஏதும் இருக்குமேவென்று
நான் கவலைப்பட ,
நீ சிரித்த சிரிப்பில்
மின்னல் வெட்டியது
மழை பொழிந்தது
மழை நனைத்த நிலமாய்க்
குளிர்ந்தது கால்
கைகளின் நடுக்கத்தை மறைக்க
காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கைநுழைத்து
வான் பார்த்தோன் பார்

ஒரு சோம்பேறியின் கடல்

த.அஜந்தகுமார்.

டற்கரை மணலுள்
புதைந்து
திமிறி நடக்கும்
கால்கள்
நீ என் கைப்பிடித்தபடி
ஓடுவது போல்
பாய்ந்து பாய்ந்து நடக்கிறாய்
நீ முன்னேயும்
கொஞ்சம் நான் பின்னேயும்
நடக்கிறோம்.

விரிந்து கிடக்கும் கடல்
வா என்று
ஓடிவந்து கால் தழுவி
நக்கி நனைக்கும் அலைகள்
நீ இப்போதென்
மார்புள் புதைந்து
உயிர் தடவுகிறாய்
நான் கடலைப்
பார்த்தபடியே இருக்கிறேன்

என் நெஞ்சுக் கூட்டுக்குள்
நொருங்கித் தூங்கும்
ஒரு கனவின் காதை
என்னைத் தட்டி
தன்னை எழுதும்படி
சொல்லிக்கொண்டிருக்க
சுரணையின்றி
கண்ணை மூடுகின்றேன்
நீ என் நெஞ்சுமயிர் எண்ணுகின்றாய்.

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner