*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

ஞாயிறு, 2 மே, 2010

என்னைக் கடந்து செல்லும் நகரம்



---த.அஜந்தகுமார்



எனது நகரம்
என்னை
மிக வேகமாகக் கடந்து செல்கிறது

பிதுங்கி நிறைந்த பஸ்ஸை
மறிக்காது
கை கட்டி நிற்பவனாய்
நான்.

நகரத்தின் கைவிடப்பட்ட
கைக்குழந்தையாய்
கை சூப்பி
தெரு அளக்கிறேன்

எனது அறையும்
நானும்
தனித்திருக்கிறோம்

நேற்று என்னுடன் மிஞ்சியிருந்த
வண்ணத்துப் பூச்சியும்
சுவரில் மோதி செட்டைகள் பிய்ந்து
உருக்குலைந்து இறந்து போயிருந்தது

வண்ணத்துப் பூச்சியின் செட்டைகளை
பத்திரப்படுத்துகிறேன்

பல்லியின் வால் ஒன்றும்
தனியே இருந்தது

வீட்டுக் கூரையின் சிலாகையில்
சாரைப்பாம்பொன்று செட்டை கழட்டி விட்டு
போயிருந்தது

என்னை நகரம் கடந்து சென்ற பின்னும்
புன்னகைத்தபடி இருக்கும் உதட்டிலும் முகத்திலும்
கடந்து போன வாகனங்களின் புகைகள்
படிந்து போயிருக்கின்றன

இன்னும் எழுத முடியாமல்
மீதமிருக்கும்
கவிதைகளுடன்
எனது அறைக்கதவை
யாரும் திறக்காதபடி மூடிவிட்டு
எழுதிக் கொண்டிருக்கிறேன் எனது நகரத்தை!

03052010 1034

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner