வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
நிம்மதியின்மை நடுவிலும் இருக்கும் ஒரு அமைதி
---த.அஜந்தகுமார்
உனது அழுகை
எனக்குள்
இறங்குகிறது
பெரும் பாறையாய்!
வார்த்தைகளற்ற
ஓலமுடனான உன் அழுகை
வாழ்க்;கையின் சாரம்
என்னவென்று வினாவிற்று.
உனது படுக்கையைச்சூழ
நிலவும் ஒரு அமானுஸ்யம்
உன்னையே நீ தொலைத்தபடி
என்னுடன் துக்கிக்கும் கணங்கள்
உனது சாரமும் படுக்கை விரிப்பும்
ஈரமாகி விட்டதே
என்ற உன் இயலாமைப் பார்வை
நீராட்டி உணவூட்டி
தலைகோதி விடுகையில்
உன் சலிப்புகள் மத்தியிலும்
தெரியும் ஒரு ஏதோ ஒன்று!
இரவில் நிம்மதியாய்
உன்னால்
உறங்க முடிவதில்லை
உன்னைக் கனவுகள்
பயமுறுத்துவதாய்
உணர்கிறேன்
திடீர் திடீர் என்று
யார் யாரையோ கேட்கிறாய்
ஏதோ நடந்துவிட்டதாய்ப்
பயங் கொள்கிறாய்
உன் கனவுகளின் நிறங்களை
அறிய முடியாது
என் கண்கள் பனிக்கின்றன
யாருக்கும் துரோகம்
செய்யாத
புன்னகையின் வசீகரம் சூழ்ந்த
ஒரு உறவின் நெருக்கம்
எனக்கு வாய்த்ததென்ற
ஒரேயொரு திருப்தி
என் வாழ்வை அழைத்துச் செல்கிறது… 23022010
திங்கள், 22 பிப்ரவரி, 2010
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
பொய்யுலகக் கதைக்குறிப்புகள்
---த.அஜந்தகுமார்
1
பொன்வண்டு பிடிக்கவென்று
ஒதியம் மரத்தொடு பலமரங்கள்
என்னென்று தெரியாத
ஏக்கமுடன் தேடியலைந்தேன்
மின்னி நின்ற பச்சியினை
மகிழ்வோடு கைக்குள் பொத்தி
மெதுமெதுவாய்த் திறக்கையிலே
புழுத்த மணமொன்று
முகத்தில் அடித்தது
பிடித்த பீ வண்டு
பறந்து போனது
2
தீப்பெட்டியில் வளர்த்து வந்த
பொன்வண்டு
எப்படி இருக்கிறது என்று
திறந்து பார்த்தேன்
காணவில்லை
சாப்பிடப்போட்டிருந்த
கிளுவம் இலை
எனைப் பார்த்துச் சிரித்தது
தீப்பெட்டியைக் போபத்தோடு
நிலத்தில் எறிந்தேன்
3
மழையொன்று பெரிதாகப் பொழிந்து
சற்று ஓய்ந்திருந்தது
தீப்பெட்டி துளைத்துக்
கிளுவை முளைக்கத் தொடங்கியிருந்தது
வேரின்றி இலையினிலே
முளைத்து வரும் அதிசயத்தை
பார்த்தபடி நான் இருக்க
மரமாக அது வளர்ந்திற்று
4
கிளுவையிலே
பொன் வண்டிருந்து சிரித்திற்று.
பரபரப்பாய்
நான் அதனை நெருங்குகையில்
பீ வண்டின் வாசம்
என் நாசிக்குள் ஏறியது
பீ வண்டே பொன்வண்டாய்
ஆனதோர் உலகினிலே
நானென் செய்வேன்? – என்
நாசியென் செய்யும்?
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
என்னோடு உறையும் வாள்
---த.அஜந்தகுமார்
கையில் மினுங்கியபடி
தயாராய் இருக்கிறது
எனது வாள்
என்னைக் கூர்மைப்படுத்தவும்
யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லவும்
என்னைத் தேவையற்றுத் தொடர்பவர்களைப்
பயமுறுத்தவும்
நான் நடந்து செல்லும் பாதைகளைத்
தூய்மைப்படுத்தவும்
தயாராய் இருக்கிறது எனது வாள்
துருப்பிடித்துப் போன
கத்திகளுடன் அலைபவர்கள்
என் வாளைப் பற்றிய
கேள்விகளை முணுமுணுத்தபடி
செல்வதைக் காண்கையில்
என் நரம்புகள் தெறிக்கின்றன
துருப்பிடித்த கத்திகளையும்
பிடித்த கைகளையும்
என் வாள்கள் துண்டாட
அதிக நேரம் வேண்டியதில்லை
எனினும் பொறுத்திருக்கிறோம்
மினுங்கும்
என் வாளும்
நானும். 16022010
சனி, 13 பிப்ரவரி, 2010
ஓவியத்தில் காணமுடியாக் கோடுகள்
---த.அஜந்தகுமார்
இன்றிந்தத் தினமதில்
எந்தன் நெஞ்செங்கும்
உந்தன்
நினைவெழுதும் நெடுங்கதைகள்
நட்பின் சுருதியில் நனைந்து கிடந்த
நம் வாழ்விடை
துளிர்த்த….
புரியாத அன்பின் புதிர்ப் பக்கங்களால்
நான் மூடப்பட்டு இருக்கிறேன்
கோடுகள் வரைந்து சென்ற
ஓவியத்தில்
மீண்டும் என்னால்
கோடுகளைக் காணமுடியவில்லை
நட்பின் சுருதி நனைத்த
உன் ஓவியத்தில்
இன்னும் கசங்காது உள்ளது
ஏதோவொன்று.
எந்தப் பெண்ணைக் கடந்து செல்கையிலும்
அம்மா எனக்காய்ப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும்
உன்னை எண்ணாது இருக்க முடிவதில்லை.
மிக இரகசியமாய்
மீண்டும் உனக்கு
என்னைக் காட்ட முடியா
அவஸ்தை பிழிபட
நான் - இந்த நான் வாழ்கிறேன்
14022010
1127 am
இன்றிந்தத் தினமதில்
எந்தன் நெஞ்செங்கும்
உந்தன்
நினைவெழுதும் நெடுங்கதைகள்
நட்பின் சுருதியில் நனைந்து கிடந்த
நம் வாழ்விடை
துளிர்த்த….
புரியாத அன்பின் புதிர்ப் பக்கங்களால்
நான் மூடப்பட்டு இருக்கிறேன்
கோடுகள் வரைந்து சென்ற
ஓவியத்தில்
மீண்டும் என்னால்
கோடுகளைக் காணமுடியவில்லை
நட்பின் சுருதி நனைத்த
உன் ஓவியத்தில்
இன்னும் கசங்காது உள்ளது
ஏதோவொன்று.
எந்தப் பெண்ணைக் கடந்து செல்கையிலும்
அம்மா எனக்காய்ப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும்
உன்னை எண்ணாது இருக்க முடிவதில்லை.
மிக இரகசியமாய்
மீண்டும் உனக்கு
என்னைக் காட்ட முடியா
அவஸ்தை பிழிபட
நான் - இந்த நான் வாழ்கிறேன்
14022010
1127 am
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அஜந்தகுமாரின் கவிதைகள்
அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.
குப்பிழான் ஐ.சண்முகன்