*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பொய்யுலகக் கதைக்குறிப்புகள்
---த.அஜந்தகுமார்

1

பொன்வண்டு பிடிக்கவென்று
ஒதியம் மரத்தொடு பலமரங்கள்
என்னென்று தெரியாத
ஏக்கமுடன் தேடியலைந்தேன்

மின்னி நின்ற பச்சியினை
மகிழ்வோடு கைக்குள் பொத்தி
மெதுமெதுவாய்த் திறக்கையிலே
புழுத்த மணமொன்று
முகத்தில் அடித்தது

பிடித்த பீ வண்டு
பறந்து போனது

2

தீப்பெட்டியில் வளர்த்து வந்த
பொன்வண்டு
எப்படி இருக்கிறது என்று
திறந்து பார்த்தேன்

காணவில்லை

சாப்பிடப்போட்டிருந்த
கிளுவம் இலை
எனைப் பார்த்துச் சிரித்தது

தீப்பெட்டியைக் போபத்தோடு
நிலத்தில் எறிந்தேன்

3

மழையொன்று பெரிதாகப் பொழிந்து
சற்று ஓய்ந்திருந்தது

தீப்பெட்டி துளைத்துக்
கிளுவை முளைக்கத் தொடங்கியிருந்தது

வேரின்றி இலையினிலே
முளைத்து வரும் அதிசயத்தை
பார்த்தபடி நான் இருக்க
மரமாக அது வளர்ந்திற்று

4

கிளுவையிலே
பொன் வண்டிருந்து சிரித்திற்று.
பரபரப்பாய்
நான் அதனை நெருங்குகையில்
பீ வண்டின் வாசம்
என் நாசிக்குள் ஏறியது

பீ வண்டே பொன்வண்டாய்
ஆனதோர் உலகினிலே
நானென் செய்வேன்? – என்
நாசியென் செய்யும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்
அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்Video Post

Square Banner