த.அஜந்தகுமார்.
கடற்கரை மணலுள்
புதைந்து
திமிறி நடக்கும்
கால்கள்
நீ என் கைப்பிடித்தபடி
ஓடுவது போல்
பாய்ந்து பாய்ந்து நடக்கிறாய்
நீ முன்னேயும்
கொஞ்சம் நான் பின்னேயும்
நடக்கிறோம்.
விரிந்து கிடக்கும் கடல்
வா என்று
ஓடிவந்து கால் தழுவி
நக்கி நனைக்கும் அலைகள்
நீ இப்போதென்
மார்புள் புதைந்து
உயிர் தடவுகிறாய்
நான் கடலைப்
பார்த்தபடியே இருக்கிறேன்
என் நெஞ்சுக் கூட்டுக்குள்
நொருங்கித் தூங்கும்
ஒரு கனவின் காதை
என்னைத் தட்டி
தன்னை எழுதும்படி
சொல்லிக்கொண்டிருக்க
சுரணையின்றி
கண்ணை மூடுகின்றேன்
நீ என் நெஞ்சுமயிர் எண்ணுகின்றாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக