காயங்களிடை
கரைகிறது
காதல்
கரைகிற காதலே
செமித்து மருந்தாகி
இனிக்கிறது
சொற்களில்
தடக்கி விழுகிறது
வாழ்வு!
சொற்களால்
எழுகிறது வாழ்வு
கோயிலாய்!
தன்முனைப்புற்றுத்
தருக்குகிறது
மனம்!
முனையுடைந்து
மூர்க்கங் கரைந்து
குழைகிறது மனசு!
விழுங்கும்
விருப்பங்கள்
புதைகிறது தொண்டையில்!
தொண்டை வீங்கி
சொற்கள் உடைகின்றன
கற்கண்டாய்!
நோயில் வீழ்ந்ததாய்
நொருங்கிக் கூனுகின்றேன்
காற்றில் பறப்பதாய்
கனவில் செருக்குகிறேன்
கால்களை முறிப்பதுவே
கைத்தடியும் தருகிறது
வாலினை நறுக்குவதே
வாலினையும் ஆட்டுது
மனசின்
கதவுத் திறப்புகள்
மடியினில் இல்லை
பூட்டுவதும் நானில்லை
திறப்பதுவும் நானில்லை
உள்ளிருப்பதுவே நான்!